Saturday, 28 January 2012

நம்பிக்கையில் நிம்மதி


நம்பிக்கையில் நிம்மதி

கவியரசு கண்ணதாசன்

எதன் மீது எனக்கு சந்தேகம் வந்தாலும் நிம்மதி பாழாகிறது.

இது மனைவியாயினும் சரி. மகேஸ்வரனாயினும்!

எது பிடிக்கவில்லையோ அதில் இருந்து ஒதுங்கி நில். ஆனால் தினமும் சந்தேகப்பட்டு உடம்பையும் மனதையும் கெடுத்துக் கொள்ளாதே.

சாப்பிட்டு முடித்த பின், எதைச் சாப்பிட்டோமோ என்று நினைத்தால் அடிவயற்றை கலக்கும். சாப்பிடுவதற்கு முன்னாலேயே நன்றாகப் பார்.

கல்யாணம் கட்டி சாந்தி முகூர்த்தம் முடிந்த பின் இதையா கட்டிக் கொண்டோம் என்று நினைத்தால் நிம்மதி அடியோடு போய்விடும்.

முன்னாலே யோசி. யோசித்துச் செய்த முடிவுகளில் நம்பிக்கை வை.

திருப்பதிக்குப் போவது என்று முடிவு கட்டினால் திரும்பி வரும் போது பலன் இருக்கும் என்று நம்பு.

நம்பிக்கையும் சந்தேகமும் மாறி மாறி ஊடாடினால், அப்போதும் நிம்மதி இருக்காது.

மீன் கூடைக்குப் பக்கத்தில் பூக்கூடையை வைத்தால் மீன் வாசமும் தெரியாது; பூ வாசமும் தெரியாது. கலப்படமான ஒரு அருவருப்பே தோன்றும்.

நண்பன் தீயவன் என்றால், விலகிவிடு; நல்லவ என்றால் நம்பிவிடு. விலக்கியவனை நம்பத் தொடங்காதே; நம்பியவனை விலக்கத் தொடங்காதே.

இன்றையப் பொழுது நன்றாக இருக்கும் என்று நம்பு; நன்றாகவே இருக்கும்.

என் மனைவி உத்தமிஎன்று நம்பு; அவள் தவறாகவே நடந்தாலும், உனக்கு நிம்மதி இருக்கும். தன் தவறுகளுக்காக அவள் இந்த ஜென்மத்தில் வெந்து வெந்து சாவாள்.

இறங்குகிற தொழிலில் நம்பி இறங்கு; தொழில் திறமையே உனக்கு வந்து விடும்.

தண்ணீரில் விழுந்து விட்டால், நீந்தத் தெரியும் என்று நம்பு; நீந்தத் தெரிந்து விடும்.

கடன் வந்து விட்டால், கட்ட முடியும் என்று நம்பு; கட்டிவிட முடியும்.

முடியாது, முடியாதுஎன்பவனும், அது இல்லை, இது இல்லை என்று வாதிடும் நாத்திகனும் மரக்கட்டைகள்.

உண்டு என்பவனுக்கே உள்ளம் வேலை செய்கிறது.

எதையும் கண்ணால் கண்டால்தான் நம்புவேன், என்கிறவன் முகத்தில் மட்டுமே கண்களைப் பெற்றவன்; அகத்திலே கண்ணில்லாதவன்.

ஊனக் கண் ஒரு கட்டத்திலே ஒளியிழந்து போகும்; ஞானக்கண் எப்போதும் பிரகாசிக்கும்.

நம்பிக்கையோடு முயன்றால், சாணத்தில் தங்கம் கிடைக்கும். சந்தேகத்தோடு பார்த்தால், தங்கமும் சாணம் மாதிரித்தான் தெரியும்.

கல்யாணமான ஒருத்தி, பாலகிருஷ்ணன் பொம்மையை வைத்துக் கொண்டு, வாடா கண்ணா! வாடா கண்ணா! என்று அழைத்துப் பார்க்கட்டும், மலடி வயிற்றிலும் மகன் பிறப்பான்.

திருநீறோ, திருமண்ணோ இடும்போது கடனுக்கு இடாமல் நம்பிக்கையில் இடு. அவை இருக்கும் வரை மூளை பிரகாசிக்கும்.

நம்பியவர் கெட்டாரா? நம்பாதவர் வாழ்ந்தாரா?

ஒரு தாயின் தெய்வ நம்பிக்கையால், புத்தியில்லாது இருந்த நானும் ஓரளவு புத்தியுள்ள வனானேன்.

என்னுடைய தெய்வ நம்பிக்கையால் நான் எதிர்பாராத அளவுக்கு சூழ்நிலைகள் வாய்த்துள்ளன.

முப்பத்து மூன்று வருஷங்களுக்கு முன்னால், பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தபோது ப்ரூப் படிக்கத் தெரியுமா? என்றார்கள்; தெரியும் என்றேன். பழக முடியும் என்று நம்பினேன். பழகிக் கொண்டேன்.

கவிதை எழுதத் தெரியுமா? என்றார்கள்; நம்பினேன். எழுதினேன்.

முடியும் என்றால் முடிகிறது; தயங்கினால் சரிகிறது.

கூந்தலை முடிக்கக் கை இல்லாதவர்களுக்குத்தானே, அது சரிந்து விழுகிறது.

நாளைக்குத் பினாங்கு போய்ச் சேருகிறோம் என்று இரவு பஸ் ஏறு; அது பினாங்கு போய்ச் சேர்ந்துவிடும். இதுவா? போகுமா? என்று சந்தேகப்படு; அது பறப்படவே புறப்படாது.

சீதை பத்தினி என்ற நம்பிக்கையில்தான், ராமன் தைரியமாக இருந்தான்; ராமன் வருவான் என்ற நம்பிக்கையில் தான் சீதை உயிரோடிருந்தாள்.

ராமன் மீது நம்பிக்கை வைத்தே, விபீஷணன் அவனோடு சேர்ந்தான்.

இராவணன் மீது நம்பிக்கை வைத்தே, கும்பகர்ணன் அவனோடிருந்தான்.

நம்பினால் கை கொடுப்பது நம்பிக்கை.

ஈஸ்வரனை நம்பி காலில் விழு. பகவானை நம்பி அவன் பாதாரவிந்தங்களில் விழு.

விழுந்த பின் எழுவதற்கு உன் கைகள் தாம் பயன்படுகின்றன என்றால், அந்தக் கைகள் அவனுடைய கைகள் என்று அர்த்தம்.

அங்கே போனால் அது கிடைக்காது; இங்கே போனால் இது கிடைக்காது என்று சந்தேகப்பட்டால், நீ எங்கேயும் போக மாட்டாய்; எதிலும்
முன்னேற மாட்டாய். இருந்த இடத்திலே இருந்தே சாவாய்.

No comments:

Post a Comment